இலங்கையை மீட்க புலம்பெயர் தமிழர்களும் டொலர்களுமே தேவை! வெளியிடப்பட்டுள்ள தகவல்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளும் டொலர்களுமே அவசியம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(7) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை மீள கட்டியமைக்க உதவும் நாடுகள் டொலர்களையோ அல்லது பொருள் உதவிகளையோ அல்லது நன்கொடைகளையோ வழங்கி நிரந்தரமாக நிமிர்ந்து நிற்க வைத்துவிடலாம் என்று நினைக்கின்றது.
நாட்டின் நிலை
அது தப்பு கணக்காகிவிடும் இவை யாவும் தற்காலிகமாக ஓட்சிசன் கொடுக்கும் செயற்பாடுகளே ஆகும்.
தற்காலிக உதவிகளை வழங்கி விட்டு தங்களுக்கு தேவையான நவ காலணித்துவ பூகோள நலன்களை நாடுகள் இலக்கு வைத்தல் வேண்டும்.
இலங்கை மக்களுக்கு ஊழல் அற்ற நேர்மையான ஆட்சியாளர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாது போவதுடன் பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டெழ முடியாது போகும்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தலை கொடுக்க இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா, யப்பான் , அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் பலதரப்பட்ட முனைப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நாடுகள் அனைத்தும் அவர்களது முயற்சியில் வெற்றிகரமாக இலங்கையை மீட்க வேண்டுமாக இருந்தால் ஒரே ஒரு வழி இருக்கிறது.
அதற்கான தீர்வினை கண்டு விட்டால் வீழ்ந்துள்ள இலங்கை பொருளாதாரமும் அரசியலும் நிலையாக எழுந்து நிற்க முடியும்.
அதுதான் இலங்கைத் தீவில் புரையோடி போய் உள்ள 74 வருட தமிழின பிரச்சினைக்கான நிரந்தர அதிகார பகிர்வு புதிய அரசியலமைப்பு ரீதியாக தீர்வாக உறுதி செய்யப்படுவது.
தீர்வு
இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு புலம்பெயர் தேசத்து தமிழ் முதலீட்டாளர்களின் பெருந்தொகையான முதலீடுகளும் டொலர்களும் ஆகும்.
இதன் மூலமே இலங்கையின் வீழ்ச்சியை மீட்க தலை கொடுக்கும் நாடுகளுக்கு வெற்றிக்கான வழியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.