உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி பொட்டலம் கட்டியது.
நேற்று (07.10.2023) டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணித்தலைவர் பௌவுமா 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயின்டன் டிகாக் மற்றும் வேண்டர் டூஷன் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசினர்.
அதிவேகமாக சதம் அடித்த வீரர்
இறுதியில் மார்க்கரம் அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 106 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இறுதியில் கிளாசென் 32 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 39 ஓட்டங்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்கள் குவித்தது.
இது உலககோப்பை கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம் ஆகும்.
ஓட்ட குவிப்பு வேகம்
இதனையடுத்து 429 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் நிஷாங்கா டக் அவுட் ஆகியும், குசல் பெரேரா 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
சமர விக்ரமா 23 ஓட்டங்களில் வெளியேற குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 76 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 8 சிக்ஸர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். குசல் மெண்டிஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 76 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதேபோன்று அசலங்காவும் அபாரமாக விளையாடி 79 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த இரண்டு வீரர்களும் ஆட்டம் இழந்த பிறகு இலங்கை அணியின் ஓட்ட குவிப்பு வேகம் குறைந்தது.
தனஞ்செய்ய டி சில்வா 11ஓட்டங்களில் வெளியேற அணித்தலைவர் சனக்கா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 பந்துகளில் 68 ஓட்டங்கள் சேர்த்தார்.
இறுதியில் கசின் ரஜாதா 33 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் 44.5 ஓவர்களில் இலங்கை அணி 326 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணி விக்கெட்டுகள் விழாமல் விளையாடி இருந்தால் குறைந்தபட்சம் 400 ஓட்டங்கள் யாவது தொட்டு இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.