ஜெனீவாவின் சாட்சிய சேகரிப்பு பொறிமுறைக்கு மீண்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை
ஜெனீவா மனித உரிமை ஆணையத்தின் 46-1 தீர்மானம் மற்றும் நீடிக்கப்பட்ட 51-1 தீர்மானம் ஆகியவற்றின் மூலம், ஐக்கிய நாடுகளின் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கு இலங்கை தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56ஆவது அமர்வில், இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு செயல்முறைகள்
இந்த சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது பயனற்றது என்றும், இலங்கையில் உள்ள சமூகங்களை பிளவுபடுத்துவதற்கும் மேலும் துருவப்படுத்துவதற்கும் மட்டுமே அது உதவுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு செயல்முறைகள் மூலம் போருக்கு பிந்தைய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வரைவு யோசனை மீதான ஆலோசனைகள் தொடர்கின்றன.
இது, இலங்கையின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துகளுக்கு போதுமான காலத்தை வழங்கியுள்ளது.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பங்குதாரர்களுடன் பல ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் இலங்கை தூதுக்குழு தெரிவித்தது.
மனித உரிமை சூழ்நிலைகள்
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில்,பொது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், 6,025 முறைப்பாட்டாளர்களில் 5,556 பேர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
2024 ஏப்ரலுக்குள் குறித்த அலுவலகம் 16 காணாமல் போனவர்களைக் கண்டறிந்துள்ளது. 11 பேர் உயிருடன் இருப்பதையும், 1 பேர் இறந்துவிட்டதையும் அது உறுதிசெய்துள்ளது.
மேலும் 4 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அத்துடன் 1,709 குடும்பங்கள் 2028 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் வகையில், காலக்கெடு நீடிக்கப்பட்ட, ‘பிரசன்னமின்மை’ சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.
இந்தநிலையில், இலங்கை விடயத்தில், உலகம் முழுவதிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகள் மற்றும் ஸ்தாபகக் கொள்கை, கோட்பாடுகளுக்கு இணங்க பேரவையின் பாரபட்சமற்ற தன்மை இருத்தல் வேண்டும்.
குறித்த கோட்பாடுகளுக்கு முரணான பேரவையின் தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை எதிர்ப்பதாக இலங்கை இன்றைய அமர்வின்போது தெரிவித்தது.
இதனை தவிர்த்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணையை மீறுவது மற்றும் அதன் அரசியல்மயமாக்கும் செயற்பாடுகள் என்பன, பேரவையின் நம்பிக்கையை சிதைக்கவே வழிவகுக்கும் என்றும் இலங்கை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |