ட்ரம்ப் புறப்பட்ட அடுத்த நாளே வெளியான புடினின் பயண அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 19 முதல் 20 வரை சீனாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இடையிலான விரிவான கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.
புடினின் இந்த பயண அறிவிப்பு
இது தவிர, சீனப் பிரதமர் லி சியாங்குடன் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் புடின் விவாதிக்க உள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 'நல்லுறவு மற்றும் நட்பு கூட்டுறவு ஒப்பந்தத்தின்' 25ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்த விஜயம் அமைகிறது என்று ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக, டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்ட அடுத்த நாளே புடினின் இந்த பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பில் பரந்த அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள் பேசப்பட்டாலும், தாய்வான் விவகாரம் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் போன்ற முக்கிய விவகாரங்களில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
சீனா மறுப்பு
மேலும், உக்ரைன் போரில் சீனா அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்து, ஒரு சமரசத் தூதுவராகத் தன்னை முன்னிறுத்தினாலும், போருக்கு முன்பாக புடினுடன் ஷி ஜின்பிங் அறிவித்த "எல்லையற்ற" நட்பு அந்த நிலையை பலவீனப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்திக்கு சீன நிறுவனங்கள் மறைமுகமாக உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
வொஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே பதற்றம் நிலவி வரும் வேளையில், மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்குப் பிறகு ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உருவெடுத்துள்ளதும், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் சமீபத்திய மாதங்களில் மேலும் ஆழமடைந்துள்ளதும் இந்த பயணத்தின் மூலம் குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.