அதிக வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
விடுத்துள்ள அறிவுறுத்தல்
இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வானிலை காரணமாக மன அழுத்தம் போன்ற நோய்கள் தீவிரமடையக்கூடும் எனவும், இது மனநலத்தைப் பாதித்து நினைவாற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்தும் திறனைக் குறைக்கக்கூடும் எனவும் ராகம மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மற்றும் சிறார்கள் மனநல விசேட நிபுணர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.