ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத கனமழை: இதுவரையில் 8 பேர் பலி..
கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது. வழக்கமாக ஒகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை விட 3 மடங்கு அதிகமான மழை வெறும் அரை நாளில் பதிவாகியுள்ளது.
வரலாறு காணாத கனமழை
ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேநேரம் தொடருந்து மற்றும் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே முடங்கினர்.
மேலும், 1,800-க்கும் மேற்பட்டோர் அரச அலுவலகக் கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.