உக்ரைனில் தானியங்களை திருடிய ரஷ்யா - வெளியான புகைப்படங்கள்
உக்ரைனில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்கள் சிரியாவுக்குக் கொண்டு சென்றதாக செயற்கைக்கோள் பட நிறுவனமான Maxar அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் என்ற இடத்தில் இரண்டு ரஷ்யக் கொடியிடப்பட்ட கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்பட்டிருப்பதை படங்கள் காட்டுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பிறகு, சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அதே கப்பல்களின் படங்களை கைப்பற்றியுள்ளதாக Maxar நிறுவனம் அறிவித்துள்ளது. கப்பல்களில் மேற் பகுதி திறந்திருந்தன.
உக்ரைனின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு
அத்துடன் தானியங்களை எடுத்துச் செல்ல லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதாக Maxar நிறுவனம் கூறியுள்ளது. பிப்ரவரியில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து தானியங்களைத் திருடியதாக உக்ரைன் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை மூடுவதன் மூலம் ரஷ்யா உலகளாவிய பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின, உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.