உக்ரைனுக்கு விரையும் ஐரோப்பிய தலைவர்கள்! கூர்மையடையும் உக்ரைன் போர்க்களம்!
உக்ரைனுக்கு செல்லும் தலைவர்கள்
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள் இன்று உக்ரைனுக்கு பயணம் செய்கின்றனர்.
தங்கள் ஆதரவைக் காண்பிக்கும் முயற்சியாகவே அவர்கள் இன்று உக்ரைனுக்கு செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ட்ராகி ஆகியோயோரே கீவ்க்கு செல்லவுள்ளனர்.
உக்ரைனின் வீரம்
வீரத்துடன் செயற்படும் உக்ரைனியர்களுக்கு ஐரோப்பிய மக்களின் தெளிவான ஆதரவை வழங்கவே தாம் அங்கு செல்லவுள்ளதாக இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன ஜனாதிபதி, ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின்போது ரஷ்ய இறையாண்மைக்கு பீய்ஜிங்கின் ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், சீனா, தன்னை வரலாற்றின் தவறான பக்கத்தில் காட்டுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பதுங்குக்குழிகளில் மக்கள்
இது இவ்வாறிருக்க உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்பில் அச்சம் மேலிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் காரணமாக அசோட் இரசாயன ஆலைக்கு கீழே உள்ள பதுங்கு குழிகளில் நுாற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாராகியுள்ளபோதும், அந்த உதவிகளை, தாக்குதல் சம்பவங்கள் தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.