துரத்தித் துரத்தி தாக்கிய ரஷ்ய ட்ரோன்..!
தெற்கு உக்ரைன் நகரமான கெர்சனில் தெரு வியாபாரி ஒருவரை ரஷ்ய ட்ரோன் துரத்திச் சென்று தாக்கிய காணொளி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் பொலிஸார் வெளியிட்ட அந்த காணொளியில், விற்பனைக்காக பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்றின் அருகே நின்றிருந்த 50 வயதுடைய நபரை ரஷ்ய ட்ரோன் துரத்துவதும், அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாகனத்திற்கு பின்னால் மறைந்தபோது அது வெடித்துச் சிதறுவதும் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலில் அந்த வியாபாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியபோதிலும், குண்டு சிதறல்களால் காயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவே ரஷ்யா இத்தகைய ட்ரோன் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், ட்ரோனை இயக்கிய நபருக்கு அவர் தாக்குவது ஒரு சாதாரண பொதுமக்கள் என்பது தெளிவாகத் தெரிந்தே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.