புடினுக்கு எதிரான பிடியாணை உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது! ரஷ்யா பதிலடி
உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கி கடந்த பெப்ரவரியுடன் ஓராண்டு கடந்து உள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட தடைகளை விதித்தும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
சர்வதேச அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யா தொடர்ந்து போரை நீட்டித்து வருகிறது.
சர்வதேச குற்ற நீதிமன்றம்
இந்நிலையில், போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது.
இதற்கு சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக உக்ரைனில் நடந்து வரும் போரில், ரஷ்ய படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினே பொறுப்பு என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, அதிபர் புடின் மற்றும் ரஷ்ய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக பிடியாணை உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.
பிடியாணை கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது
எனினும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக இருந்து வரும் டிமிட்ரி மெத்வதேவ் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில், புடினுக்கு எதிராக சர்வதேச குற்ற நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த உத்தரவுக்கான காகிதம் எந்த இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை என தெரிவித்து, அதற்கு பக்கத்தில் கழிவறை ஒன்றிற்கான எமோஜி ஒன்றையும் அவர் பதிவிட்டு உள்ளார்.
The International Criminal Court has issued an arrest warrant against Vladimir Putin. No need to explain WHERE this paper should be used?.
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) March 17, 2023
அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் இந்த பிடியாணை கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என அவர் ஒப்பிட்டு உள்ளார்.
இதுபற்றி ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் ஓர் உறுப்பினராக ரஷ்யா இல்லை. இந்த அமைப்புடன் ரஷ்யா ஒத்துழைப்பிலும் இல்லை.
அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் பிடியாணை உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது. அதனால், அந்த பிடியாணை உத்தரவு அர்த்தம் இல்லை என அறிவித்து உள்ளார்.