டீசல் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த ரஷ்யா தீர்மானம்
ரஷ்யாவில் டீசல் உற்பத்தி உள்நாட்டுத் தேவையை விட அதிகரிக்கும் பட்சத்தில், டீசல் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை பகுதி அளவில் தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் நிலவி வரும் சூழலில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் உரையாற்றிய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், நாட்டின் உள்நாட்டு டீசல் சந்தை தற்போது சீரான நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதித் தடை
இருப்பினும், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும், நேற்றிரவு(01.10.2026) நான்கு சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் வரை உலகச் சந்தைக்கு டீசல் விநியோகிக்கப்பட மாட்டாது என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்த போதிலும், உற்பத்தியைப் பொறுத்து ஏற்றுமதித் தடை தளர்த்தப்படலாம் என துணைப் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.