அரசாங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை.. வெளியான அதிவிசேட வர்த்தமானி
தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது அரச நிறுவன ஒன்றிணைப்புச் செயன்முறையின் கீழ், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் அரச நிறுவனக் கட்டமைப்பை மேலும் வினைத்திறனாக்குதல், பொது வளங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்துதல் மற்றும் ஒரே துறையை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கு இடையிலான பணிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்த்தல் ஆகிய நோக்கங்களுடன், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரச வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தியோகபூர்வ நடவடிக்கையாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி
இதற்கமைய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய, 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவிற்கு ஏற்ப, 2026 நவம்பர் 05 ஆம் திகதியிடப்பட்ட 2513/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 1995 ஜூலை 28 ஆம் திகதியிடப்பட்ட 882 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் ஸ்தாபிக்கப்பட்ட 'இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்' கலைக்கப்பட்டு, அதன் அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், உரிமைகள், பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் அனைத்தும் 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் 'தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையிடம்' ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கலைக்கப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சேவை, விடுமுறை மற்றும் ஓய்வூதியப் பயன்கள் தொடர்பான உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவர்கள் புதிய அதிகாரசபையின் ஊழியர்களாகத் தொடர்ந்து பணியாற்றுவதற்குரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.