10 நாட்களில் 170 வெளிநாட்டு போராளிகளை கொன்றுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் கடந்த 10 நாட்களில் 170 வெளிநாட்டு கூலிப்படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய துருப்புக்களுடன் சண்டையிடுபவர்களை அவர் குறிப்பிடுகிறார், எனினும், இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
"பொதுமக்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலை அகற்றுவது உட்பட அதன் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் என செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உக்ரைன் அதன் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசும் குடிமக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாக ரஷ்யா மீண்டும் மீண்டும் பொய்யாகக் கூறி வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நடந்த தாக்குதலில் பெண் ஒருவர் பலி
இதனிடையே, உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் சந்தையில் நடந்த தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன் குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரை எந்த வகையான ஆயுதம் தாக்கியது என்பது உடனடியாகத் தெரியவில்லை. அன்றைய தினம் சந்தை மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் சில கடைகள் இன்னும் திறந்திருந்ததாகவும் உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குடிமக்களை தங்குமிடங்களில் தங்குமாறு ஸ்லோவியன்ஸ்க் மேயர் வாடிம் லியாக் வலியுறுத்தினார், நகரம் ஷெல் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.