சட்டத்தின் ஆட்சி வெறும் மேடைப் பேச்சு மாத்திரமே! அநுர அரசை சாடும் சஞ்சீவ எதிரிமான்ன
தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் 'சட்டத்தின் ஆட்சி' என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே சுருங்கிவிட்டது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று(13.5.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"சட்டத்துக்கு மேல் எவரும் இருக்க முடியாது" என மாத்தளையில் நேற்று(12) ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்தை கடுமையாக விமர்சித்த சஞ்சீவ எதிரிமான்ன, தற்போதைய அரசில் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
முறையான விசாரணை
அரசின் அரசியல் பலம் கொண்டவர்கள் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பின்வரும் சம்பவங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
"கொள்கலன் மோசடி தொடர்பில் இதுவரை எவ்வித முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஒரு இலட்சம் பேரைக் கொன்றாவது அதிகாரத்தைத் தக்கவைப்பேன் எனத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் கடுவெல மேயர் ரஞ்சன் ஜயலால் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யக்கலவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாரிய ஊழல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இன்று சட்டத்துக்கு அப்பால் பாதுகாக்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
நிலக்கரி மோசடி மற்றும் டொலர்கள் மாயமானமை போன்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் அடிப்படை வாக்குமூலங்கள் கூடப் பெறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசின் செயற்பாடுகளில் சட்டத்தை நிலைநாட்டும் எவ்வித ஆர்வமும் தென்படவில்லை.
தனது பேச்சை ஜனாதிபதி நடைமுறையில் உறுதிப்படுத்துகின்றாரா என்பதிலேயே அவரது அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது என சஞ்சீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்தார்.