ரொஷான் ரணசிங்கவின் குற்றச்சாட்டுகள்: நிராகரித்த இலங்கை கிரிக்கெட்
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை, ஐயத்திற்கு இடமின்றி நிராகரிப்பதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அமைச்சர் நேற்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுமத்திய குற்றச்சாட்டுக்கள், தீங்கிழைக்கும் மற்றும் பொதுமக்களைத் தூண்டுவதற்காக திட்டமிடப்பட்டவையாகும் என்றும் இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்
விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ரொஷான் ரணசிங்க, தாய் நிறுவனம் மற்றும் மற்றும் அதனுடன் இணைந்த உறுப்பினர்களின் நுணுக்கங்கள் பற்றிய முழுமையான புரிதல் இல்லாதவராக இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர்,சர்வதேச கிரிக்கெட் சபையின் இயக்குனர்கள் குழுவின் ஒரு இயக்குனர் என்ற வகையில், சங்கத்தின் நோக்கங்களுக்கு மதிப்பளிப்பதற்கும்,மேற்கொள்வதற்கும் கடமைப்பட்டவர் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் உட்பட ஒவ்வொரு இயக்குனரும், இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களின் நிலையை அறிவிக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், விளையாட்டு அமைச்சரின் எதிர்கால நடவடிக்கைகள், குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் அச்சம் வெளியிட்டுள்ளது.
எனவே உண்மைகளை நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற ஆய்வுக்குட்படுத்துமாறு இலங்கை கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் இலங்கையில் கிரிக்கெட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான அதன் பணியில் கவனத்தை செலுத்துவதாக கூறியுள்ள இலங்கை கிரிக்கெட், சரியான நேரத்தில் உண்மை வெல்லும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.