ATM இயந்திரத்தில் ஒரு கோடி ரூபா கொள்ளை: சந்தேகநபர்கள் பணத்துடன் கைது (Photos)
புத்தளம் - மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று 10 நாட்களுக்குள் மதுரங்குளி பொலிஸாருடன் இணைத்து புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான குற்ற விசாரணை பிரிவினர் சந்தேகநபர்களை நேற்று (17) கைது செய்துள்ளனர்.
இந்த மூன்று சந்தேகநபர்களுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மீதமுள்ள 92 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்படும்போது, கொள்ளையடித்த பணத்தில் குறித்த மூவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
கடந்த 7ஆம் திகதி இரவு, தனியார் வங்கி ஒன்றுக்குச் சொந்தமான தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரத்தின் பராமரிப்பு பணியாளர்கள் போல் நடித்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில், மிகவும் தந்திரமாக திறப்பு ஒன்றால் குறித்த ஏ.ரி.எம். இயந்திரத்தின் பிரதான கதவைத் திறந்து, உரிய இரகசிய எண்களைப் பயன்படுத்தி, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற 10 நாட்களுக்குள் மேற்படி கொள்ளைச் சம்பவத்துக்குத் தலைமை தாங்கிய இரண்டு பிரதான சந்தேகநபர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பாதுகாப்பு பிரிவு
அந்தத் தனியார் வங்கியின் பாதுகாப்பு மற்றும் பண பரிவர்த்தனைக்குப் பொறுப்பான தனியார் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்த இருவரும், அநுராதபுரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு நபருமே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு புத்தளம் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புத்தளம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் ஆலோசனையின் பேரில், புத்தளம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ.ரூபசிங்க, ஆனமடுவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த குமார, புத்தளம் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ. சந்திரசிறி லால் மற்றும் மதுரங்குளிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி விக்கிரமசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.