உலகை உறைய வைத்த காசா மருத்துவமனை தாக்குதல்....! இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம்
புதிய இணைப்பு
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோதலின் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் அதிர்ச்சி
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரசு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
முதலாம் இணைப்பு
பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.
மக்கள் வெளியேற கால அவகாசம்
கடந்த 11 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலில், தரை வழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்த தாக்குதலில் இது வரையில் 5000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்கள் பாதுகாப்பிற்காக மக்கள் இடம்பெயர்ந்தும், வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தும் வருகின்றனர்.
காசா பகுதியிலிருந்து மக்கள் வெளியேற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் விமான படை பலஸ்தீன் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை ஹமாஸ் அமைப்பின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
உலகப் போர்
இஸ்ரேலின் இந்த அதிபயங்கர தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த யுத்தம் உலகப் போராக உருமாறக் கூடிய சர்வதேச சூழ்நிலை அதிகரித்தும் வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கனவே களமிறங்க படைகளை அனுப்பி வருகிறது.
பிரான்ஸும் அமெரிக்காவை பின்பற்றி படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.