அநுர அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார தொழிற்சங்கங்கள்
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கைகள்
ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுவரையில் குறித்த கோரிக்கைகளுக்கு எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கப்பெறவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதன் காரணமாகவே நேற்றைய தினம் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அவர்கள் அனுப்பியுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை
ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்க தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னர் எமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும்.
தவறினால், மீண்டும் ஒரு அறிவித்தல் வழங்கப்படமாட்டாது. உடனடியாகப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்