யாழில் கொள்ளை; சந்தேக நபர் கைது (Photo)
யாழ்ப்பாணம், சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் யாழ். தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் காலை வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
வீட்டிலிருந்த 43” தொலைக்காட்சி, எண்ணியல் ஒளிக்காட்சி தட்டு இயக்கி மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பன திருட்டுப்போயிருந்தன.
அதுதொடர்பில் யாழ். தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகளை அடுத்து குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டில்ருக் தலைமையிலான அணியினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
திருடப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்ட போது, அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, வெள்ளைவத்தையைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கடந்த 10ஆம் திகதி அச்சுவேலியில் ஒருவரைத் தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்தை சந்தேக நபர் ஒத்துக்கொண்டார்.
அதனடிப்படையில் அந்த மோதிரத்தை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து வழங்கிய ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

