கொழும்பில் செட்டியார் தெருவில் கொள்ளை : 5 மதுவரி அதிகாரிகள் கைது
கொழும்பில் செட்டியார் தெருவில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து 102 மில்லியன் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில், மது திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் (Narcotics Control Unit) சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பரிசோதகர் ஒருவரும் (Inspector) நான்கு கோர்ப்பரல்களும் (Corporals) அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உத்தியோகபூர்வ சோதனை
முன்னதாக, கடந்த ஜூன் மாதம்,சந்தேக நபர்கள் கொழும்பு செட்டியார் தெருவில் (Sea Street) உள்ள குறித்த கடைகளுக்குச் சென்று, தாங்கள் உத்தியோகபூர்வ சோதனை நடத்துவதாகக் கூறி உள்ளனர்.

அவர்கள் பணத்தை அபகரித்த பின்னர், கடைகளின் உரிமையாளர்கள் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்ததாகக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
திருடப்பட்ட பணத்தில் இருந்து 50 மில்லியன் ரூபாவை அதிகாரிகள் பின்னர், நகைக்கடை உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர் என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேக நபர்கள் வந்தபோது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய வேறு எவரேனும் சதிகாரர்கள் உள்ளனரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        