நிரந்தர கடைத்தொகுதி கோரும் வீதியோர மீன் வியாபாரிகள் - றிசாட் பதியுத்தீன் வாக்குறுதி
அம்பாறை - சம்மாந்துறையில் வீதியோரங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு, தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கான உரிய இடத்தை ஒதுக்கித் தருமாறு சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.எல்.எம். சாக்கிர், உப தலைவர் எஸ்.எல்.எம். சாப்தீன், பொருளாளர் பௌஸ்தின் மற்றும் அங்கத்தவர் ஆர். பவுஸ்தீன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
நிரந்தர கடைத்தொகுதி தேவை..
கடந்த 2026 செப்டம்பர் 19ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுத்தீன் சம்மாந்துறைக்கு வருகை தந்தபோது, மீன் வியாபாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மீன் விற்பனை செய்வதற்காக TVS கொம்பனி வீதியோரத்தில் இடம் ஒதுக்கித் தருவதாகத் தங்களிடம் தெரிவித்திருந்ததாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தங்களது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இடம் தொடர்பில் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மீன் வியாபாரத்தை நம்பியே தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடும் அவர்கள், விற்பனைக்காகக் கொண்டு வரும் மீன்களை முழுமையாக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுவதால் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கான வியாபார இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், வீதியோர மீன் விற்பனை தொடர்பான பிரச்சினையால் சில வியாபாரிகள் ஒவ்வொருவரும் தலா 10,000 ரூபாய் அபராதமாக நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்.
எவருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நாங்கள் வியாபாரம் செய்ய விரும்புகிறோம். எங்களுக்கான இடத்தை ஒதுக்கித் தந்து, எமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, வீதியோர மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.