சம்மாந்துறையில் சட்டவிரோத மீன் விற்பனை : 11 பேருக்கு அபராதம்
சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதகமான வகையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 1,10,000 ரூபாய் அபராதம் விதித்துச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17.09.2026 அன்று வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 வர்த்தகர்களுக்கு எதிராகச் சுகாதார அதிகாரிகளால் 'பி' அறிக்கை (B Report) மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வீதியோரங்களில் மீண்டும் மீன் விற்பனை
குறித்த வழக்குச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(01.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேரில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்த நீதிவான், அவருகான வழக்கினை எதிர்வரும் 17.12.2026 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை, மன்றில் முன்னிலையான ஏனைய 11 மீன் வியாபாரிகளும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
விசாரணைகளின் போது நீதிவான் "இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பயணிக்கும் வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், உள்ளூர் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள சந்தைப் பகுதிகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும்" என்றும் வியாபாரிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தி உத்தரவிட்டார்.
பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, வீதியோரங்களில் மீண்டும் மீன் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றித் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.