சீரற்ற காலநிலை:நாட்டில் பல பகுதிகள் பாதிப்பு (Photos)
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேல்
வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கின்றனர்.
இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை, அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் காளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நிறைவேற்றப்படாத கோரிக்கை
மேலும், இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கமும் நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் மழையினால் வயல் பகுதிகளில் நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் நெற்பயிர்கள் சேதமடையும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
செய்தி: பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம்
இதேவேளை யாழில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஜே/298 மறவன்புலவு, ஜே/339 வரணி வடக்கு, ஜே/145 வடலியடைப்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி: கஜிந்தன், தீபன்
விசேட கலந்துரையாடல்
யாழில் தற்போதுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது.
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(10.11.2022) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச சபை தவிசாளர்கள் முப்படையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி: கஜிந்தன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு-வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் வலையிறவு பாலம் வீதி நீரில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு நகரில் இருந்து மேற்கே மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான வீதியாகும். இவ்வீதி ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் பயணங்களை பெரும் சிரமத்துடன் மேற்கொண்டு வருவதனை காணமுடிகின்றது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மட்டு.மாவட்டத்தில் கனமழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்ககை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
கடும்மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் உட்பட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் உயர்வு
இந்நிலையில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளன.
அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 23அடி 2 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16அடி, வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 16அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதேவேளை, கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 9அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 7அடி 8 அங்குலம், வெலிக்காக் கண்டிய குளத்தின் நீர்மட்டம் 14அடி, வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 8அடி 4 அங்குலம், புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் 4 அடி 3 அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (10.11.2022) காலை 8 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் 54.6மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி, நவகிரிப்பகுதியில் 58 மீற்றர் மழைவீழ்ச்சி, தும்பங்கேணிப் பகுதியில் 22.5 மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், மைலம்பாவெளிப்பகுதியில் 43.4 மீற்றர் மழைவீழ்ச்சி, பாசிக்குடாப் பகுதியில்
26.6 மீற்றர் மழைவீழ்ச்சி, கிரான் பகுதியில் 35.2 மீற்றர் மழைவீழ்ச்சி,
உன்னிச்சைப் பகுதயில் 35 மீற்றர் மழைவீழ்ச்சி, உறுகாமம் பகுதியில் 31.5 மீற்றர்
மழைவீழ்ச்சி, வாகனேரிப்பகுதியில் 12.4 மீற்றர் மழைவீழ்ச்சி, கட்டுமுறிவுப்
பகுதியில் 37.5 மீற்றர் மழைவீழ்ச்சி, கல்முனையில் 17.1 மீற்றர் மழைவீழ்ச்சியும்
பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப்
பொறுப்பத்திகாரி சு.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி: ருசாத்
மட்டு.விமான நிலைய சுமைதாங்கி வீதியில் வெள்ளநீர்
மட்டக்களப்பு விமானபடை தளத்திற்கு முன்னால் உள்ள சுமைதாங்கி சந்தி வீதியை ஊடறுத்து 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்துவருவதால் பகுதி ஊடாக செல்லும் புதூர், வவுணதீவு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பயணிக்க முடியாத நிலை.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் மட்டக்களப்பு வாவிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து பல பிரதேசங்களுக்களை ஊடறுத்துச் செல்லும் பாலங்களின் மேலால் வெள்ள நீரி பாய்ந்துவருகின்றது.
இந்த நிலையில், மட்டு நகர் பகுதியினையும் புதூர் வீச்சுகல்முனை, சேத்துக்குடா மற்றும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் இந்த சுமைதாங்கி வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் ஓடுவதால் அந்தபகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நகருக்கு வருமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி: பவன்

















