அம்பாறை - நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அம்பாறை - நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது பிரதேசசபை உறுப்பினர்களால் நேற்று (11.10.2022) கறுப்புப் பட்டி அணிந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேசசபையில் முன்னாள் தவிசாளர் த.கலையரசன் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றமையைத் தொடர்ந்து, ஏற்பட்ட தவிசாளர் வெற்றிடத்திற்கு அமரதாஸ ஆனந்த 2020ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தவிசாளரின் செயற்பாடுகள் குறித்து ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் குறிப்பிட்ட சில காலங்களாக தவிசாளரின் செயற்பாடுகள் தன்னிச்சையாக இடம்பெறுவதாகவும், பிரதேசசபை உறுப்பினர்களின் முன்மொழிவுகள் நிறைவேற்றப்படாமை, மக்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் இருப்பது போன்ற பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதேசசபையின் உறுப்பினர்கள் இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
சபையின் 56வது பொதுச்சபை அமர்வு நேற்று இடம்பெற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
கூட்டம் இடம்பெறாமை தொடர்பில் வலியுறுத்தல்
இந்நிலையில் சபை நடவடிக்கைகளுக்காக வருகை தந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தவிசாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கூட்டம் இடம்பெறாமை குறித்தும் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.
மேற்படி நாவிதன்வெளி பிரதேசசபையில் 13 உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அதில் 11 உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




