சீரற்ற காலநிலைக்குப் பின்னரும் தொடரும் அபாயம் - ஆபத்தான நிலையில் பிரதான வீதிகள்
நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற பாதிப்புகளின் தாக்கம் இன்னும் தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
ஆபத்தான நிலையில் மலையகம்
மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பல்வேறு உடைமைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனினும், அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சீரற்ற காலநிலையின் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதியோரங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் அரிப்பினால் வேர்கள் வெளிப்பட்ட நிலையில் பல மரங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக, வீதிகளுக்கு அருகாமையில் சாய்ந்த நிலையில் காணப்படும் இம்மரங்கள் சிறிய காற்று அல்லது மழை ஏற்பட்டாலும் முறிந்து வீதியில் விழக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எதிர்காலத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு, அவற்றுக்கு கேபிள்கள் பொருத்துவது அல்லது ஏனைய பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் மரங்கள் சரிந்து விழுவதைத் தடுக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் மூலம் உயிர் மற்றும் உடைமை சேதங்களை குறைப்பதுடன், மரங்களையும் பாதுகாக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை போதியளவு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
எனவே, எதிர்வரும் காலங்களில் மீண்டும் சீரற்ற காலநிலை ஏற்படுவதற்கு முன்னர், நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதியோரங்களில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்கள் மற்றும் மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டு, உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


யாழில் ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவிப்பு