டுபாயில் சிக்கிய ஆபத்தான நபர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக்குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஊழல் தடுப்பு அதிரடிப்படை மற்றும் டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேக நபர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான முக்கிய நபராக செயற்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைகள், தாக்குதல்கள்
கஞ்சிபானியின் உத்தரவின் பேரில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்பாடுகளும் வனாத்தே சத்துவின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மற்றும் வலான ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர் ரோஹன் ஓலுகல ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் உதவியோடு இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அல் ராசிக் அல் கைமா எனப்படும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள ஆடம்பரமான வீட்டில் அவர் மறைந்திருந்தபோது, டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன அல்லது வனாத்தே சத்து விசாரணைக்காக நேற்று மதியம் டுபாய் பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின்போது, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், டுபாய் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இந்த சந்தேக நபர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வனாத்தே சத்து என்ற இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல கொலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பதுர்தீன் என்பவரை அவர் வெட்டிக் கொலை செய்தமை, மாளிகாவத்தையில் இளைஞரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆடம்பரமான வாழ்க்கை
அத்துடன், வனாத்தமுல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்தமை, கடுவெல கொரதொட்ட பகுதியில் மூன்று இளைஞர்களை கொலை செய்தமை, கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டமை, வனாத்தே பிம்சர என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இந்த நபருக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, வனாத்தே சத்து கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பிலும் முக்கிய நபராக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் டுபாயில் தங்கியிருந்து கஞ்சிபானி இம்ரான் வழங்கிய உத்தரவுகளை செயற்படுத்தியது. அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் டுபாயில் தங்கியிருந்த ஆடம்பர வீடும், பயன்படுத்திய சொகுசு மோட்டார் வாகனமும் டுபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
YOU MAY LIKE THIS VIDEO