பாடகி நந்தா மாலினியின் இறுதி விருப்பம்: குடும்பத்தினரின் தீர்மானம்!
காலஞ்சென்ற புகழ்பெற்ற பாடகி கலாநிதி நந்தா மாலினியின் இறுதி விருப்பம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இறுதி விருப்பம் குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரது இறுதிக்கிரியைகளை மிகவும் எளிமையான முறையில் நடத்துவதற்கு குடும்பத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காலை 10:00 மணிக்கு நாவல வீதி, விஜயபா மாவத்தையில் உள்ள இலக்கம் 30 இல் அமைந்துள்ள "நந்தா மாலினீ சங்கீத ஆசிரமத்திற்கு" அன்னாரின் பூதவுடல் கொண்டுவரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணி வரை அவரது உடல் அந்த இல்லத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். தனது உடலை வீட்டிலிருந்து வேறு எந்தவொரு பொது இடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டாம் என நந்தா மாலினி தனது இறுதி விருப்பப் பத்திரத்தில் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இறுதிச் சடங்குகளை எந்தவொரு ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு அன்னாரின் உடல் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பொரளை மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்று பிற்பகல் 5:00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.
அவரது பலத்த கோரிக்கைக்கு இணங்க, எந்தவொரு அனுதாபச் கூட்டமோ, புகழுரைகளோ அல்லது இரங்கல் உரை வாசிப்போ இடம்பெறமாட்டாது என்றும் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன மேலும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாடகி நந்தா மாலினியின் மறைவையிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களை பிரகடனப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.