பௌத்த தேரர்களின் பாதயாத்திரை மக்கள் போராட்டமாக மாறும்..! முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
ஞானசார தேரரின் காவி உடையை அகற்றிய நடவடிக்கை இனவாதத்தைத் தூண்டும் செயலாகும் என்றும், அரசு உடனடியாகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் பௌத்த தேரர்களின் பாதயாத்திரை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறும் அபாயம் நிலவுகின்றது என்றும் முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி எச்சரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று(11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஞானசார தேரரின் காவி உடை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நீதிமன்றத் தண்டனைக்குள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பெரும்பான்மை பௌத்த மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது.
ஞானசார தேரர் இதற்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவரின் காவி உடை களையப்படவில்லை. ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முறை மட்டும் காவி உடை நீக்கப்பட்டிருப்பது எவ்வாறு சாத்தியமாகும்?
பிக்குகள் பாதயாத்திரை
ஆட்சிக்கு வரும்போது இனவாதத்துக்கு இடமளிப்பதில்லை எனக் கூறிய அரசு, பௌத்த துறவியின் காவி உடையை அகற்றி சிங்கள பௌத்த மக்களை இனவாதத்தின்பால் தூண்டியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடையை வழங்கிக் கௌரவிக்குமாறு வலியுறுத்தியும் பிக்குகள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு அரசு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், இது மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டமாக வெடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.