தமிழால் வரவேற்று தமிழுணர்வை வெளிக்கொணரும் இயக்கச்சி றீ(ச்)ஷா
சுற்றுலா அம்சங்களை அதிகம் கொண்ட றீ(ச்)ஷா பண்ணை தமிழால் வரவேற்று தமிழ் உணர்வை ஊட்டி விடுகின்றது.
உள் நுழைந்ததும் வரவேற்கும் இயல்பில் மெய்சிலிர்க வைத்து விடுகின்றனர் றீ(ச்)ஷாவின் பணியாளர்கள்.
பரபரப்பாக இயங்கியவாறு இருக்கும் றீ(ச்)ஷாவில் தமிழ் மொழியின் பயன்பாடு மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது மகிழ்ச்சி என தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நீங்களும் ஒருமுறை றீ(ச்)ஷாபோய் தமிழுணர்வோடு சங்கமித்து வரலாம் என கவிஞர் நதுநசி குறிப்பிட்டிருந்தமையும் இங்கே நோக்கத்தக்கது.
தமிழ் அறிவுறுத்தல்
எல்லா இடங்களிலும் தமிழ் வழிகாட்டலில் அறிவிப்பு குறிப்புகள் கொண்ட பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவிப்பு குறிப்புக்களில் தமிழ் இலக்கிய உணர்வும் கருத்தாளத்தில் நுண்ணுணர்வுகளையும் கருத்திலெடுத்திருப்பது மகிழ்ச்சி என தமிழ் புலமையாளர்கள் பலர் புழுகாங்கிதம் அடைந்ததனை அவதானிக்கலாம்.
மிருகக்காட்சி சாலை என குறிப்பிடல் அல்லது மிருகங்களை பார்க்கலாம் என குறிப்பிடும் இயல்பில் றீ(ச்)ஷாவின் முயற்சி மனதைக் கவர்ந்து விட்டது.மிருகங்களைச் சந்தித்தல் என்ற வார்த்தைத் தொடர் தன் மனதை திடுக்கிட வைத்து உணர்வோடு சங்கமித்த இனம்புரிய முடியாத உணர்வை ஏற்படுத்தி மகிழ்ச்சியை தந்தது என கவிஞர் நதுநசி குறிப்பிட்டிருந்தார்.
தமிழை உள்ளுணர்வோடு பயன்படுத்தல்
மீனகம்,தீனகம் என்ற நுண் உணர்வுச் சொற்களை றீ(ச்)ஷாவில் காணலாம்.மதுபான நுகர்வுப்பகுதியில் குதூகலகூடம் என்ற சொல்லாடல் மிகச் சிறந்த அணுகுமுறை.
இலங்கையில் தமிழில் வாழும் தமிழைப் பயன்படுத்தும் பல இடங்கள் இருந்த போதும் றீ(ச்)ஷாவின் தமிழ் கையாள்வதில் உள்ளுணர்வுகளை அதிகளவில் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.
பணியாளர்களின் தமிழ் உரையாடல்களிலும் தூய தமிழ் உண்ரைவை உணர முடிந்தமையும் மகிழ்ச்சியான விடயம்.பாடசாலை மாணவர்கள் றீ(ச்)ஷாவிற்கு மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணங்கள் அவர்களது தமிழ் உணர்வை மேலோங்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மன்னர்களைச் சந்திக்கலாம்
தமிழ் மன்னர்களையும் சந்தித்து வரலாம்.அவர்கள் சார்ந்த குறிப்புக்களையும் பெற்று வரலாம் என்பதும் உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுத்தும் வாய்ப்பு.
இலங்கையில் தமிழ் மன்னர் பற்றிய நினைவுகளை மீட்டும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையை ஆட்சி செய்த சிங்கள மன்னர்களின் வரலாற்றுக்களை அதிகமாக பாடசாலைப் புத்தகங்களில் சேர்த்துள்ள இலங்கை கல்வித் திட்டம் சிங்கள மன்னர்களின் வரலாற்றுக் காலத்தின் சம நேரத்தில் வாழ்ந்திருந்த தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை தவிர்த்திருக்கின்றனர்.
எனினும் றீ(ச்)ஷாவின் இந்த நிலை இல்லை.தமிழ் மன்னர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிவது மகிழ்ச்சியே.
சுற்றுலாக்களை திட்டமிடுதல்
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் தங்கள் சுற்றுலாக்களை திட்டமிடும் போது எங்களை நாங்கள் முதலில் அறிவோம் என்ற எண்ணத்தில் செயற்பட வேண்டும்.
தமிழர் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா மையங்கள் இருக்கின்றன.பல இடங்கள் தமிழ் வரலாற்று மையங்களோடு தொடர்புபட்டவை. அவற்றைப் பார்வையிடுதல் தொடர்பாக சுற்றுலாப் பயன்கள் அமையும் போது எம்மைப்பற்றி நாமே அறிந்துகொள்ள ஒரு வழி கிடைக்கும்.
தமிழை நுண் உணர்வோடு கையாளப்பட்டுள்ள இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணைக்கு மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணங்கள் தமிழுணர்வை ஊட்டி தமிழோடு நம்மை வாழவைக்கும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 05 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.