இன்று நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம்!
இலங்கையில் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகிய உணவு வகைகளின் விலை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (07) நள்ளிரவு முதல் குறித்த உணவுகளின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விலை அதிகரிப்பு
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில், சுமார் 25% - 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும், தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த எரிவாயுவின் விலையைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
புதிய விலை
இதேவேளை, நேற்று (06.05.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 545 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.6,245 ஆக விற்பனை செய்யப்படும்.

அத்தோடு, 5 கிலோ சிலிண்டர் ரூ.220 அதிகரித்து ரூ.2,500 ஆக விற்பனை செய்யப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.