உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்! இணையத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆவணம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தலைமையில் மீண்டும் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளன.
இதில் குறிப்பாக அவர் இலக்கு வைக்கும் விடயங்களில் முதலாவது, அரசாங்கம் முறையற்ற விசாரணையை மேற்கொண்டதா?
இரண்டாவது, அந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் நம்பகதன்மை.
மூன்றாவது, செனல்-4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளியின் பின்னணி மற்றும் அதற்கான ஆதரவை வழங்கியது யார்? என்பனவாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல்-4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி ஊடாக இலங்கையின் புலனாய்வு பிரிவுகளுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிக்கும் அதிகாரி ஒருவர் ஆதரவளித்துள்ளதாக உதய கம்மன்பில பகிரங்கப்படுத்துகிறார்.
இதில் குறிப்பாக செனல்-4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ளடங்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டியே கம்மன்பிலவின் சில கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் மற்றும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் குழுவின் அறிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்கப்படுத்தவேண்டும் என்ற சவாலையும் கம்மன்பில விடுத்திருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையை கம்மன்பில கடந்த 21ஆம் திகதி பகிரங்கப்படுத்தினார்.
அதன்பின், இரண்டாவது கட்டமாக, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக செனல் 4 தயாரித்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நிரலின் உள்ளடக்கத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் குழு அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இதில் குறிப்பாக செப்டெம்பர் 05 ஆம் திகதி செனல் 04 ஒளிபரப்பிய Sri Lanka's Easter Bombings நிகழ்ச்சியில், பௌத்த தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்க, இஸ்லாம் இளைஞர்கள் சிலர் கத்தோலிக்க தேவாலயங்களை குறி வைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டை செனல் 04 முன்வைத்ததாக கம்மன்பில குறிப்பிடுகின்றார்.
கோட்டாபய ராஜபக்ச
“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவரும் உள்நோக்கத்துடன் நமது இராணுவ புலனாய்வுப் பிரிவு ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.
இந்த விடயங்களின் உண்மை, பொய்யைக் கண்டறிய ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என அதிகமாக குரல் எழுப்பியது கர்தினாலாகும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பதை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட குழுவிற்கு கர்தினால் அல்லது திசைகாட்டியின் தலைவர்கள் அல்லது வேறு எந்த தரப்பினரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
இந்த அறிக்கையைத்தான் இன்று நாம் பிரபலப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, இந்த நிகழ்ச்சியின் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரிக்கிறது.
சுரேஷ் சலே இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது மட்டுமின்றி இந்த குற்றச்சாட்டுகளை சரி செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறார். என்ன நடக்கிறது? செனல் -4 நிகழ்ச்சியின் உண்மைத்தன்மை குறித்து வாதிடுவதற்குப் பதிலாக, இந்த ஆவணத்தை இணையத்தில் இருந்து மெதுவாக நீக்கி கொண்டது” என கருத்துக்களை முன்வைத்தார்.
உதய கம்மன்பில ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன மீது தொடர்ச்சியான குற்றசாட்டுகளை அடுக்கி வருகிறார்.
இதில் உதய கம்மன்பிலவினால் குற்றம் சுமத்தப்படும் ஷானி அபேசேகர இலங்கையின் முக்கிய குற்றச்செயல்களை விசாரித்த புலனாய்வு அதிகாரியாவார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், வசீம் தாஜுதீன், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பரத லக்ஷ்மன் பிரேமரத்னவின் கொலை மற்றும் ஊடகவியலாளர் லசந்த கொலை உட்பட நாட்டில் பல முக்கிய குற்றவியல் வழக்கு விசாரணைக்குழுவின் முக்கிய அதிகாரியாக ஷானி அபேசேகர அறியப்படுகிறார். விக்கிரமதுங்க உள்ளிட்டோர். அதேபோன்று, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, குறிப்பாக உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தின் போது பல குறிப்பிடத்தக்க குற்றங்களை விசாரிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ரவி செனவிரத்ன ஷானி அபேசேகர
இந்நிலையில், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தனர்.
தாம் நடத்திய விசாரணைகளை தொடரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர்கள் சில கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே. தலைமையில் ஒரு குழுவை விசாரணைக்காக நியமித்தார். டி அல்விஸ் 18.09.2024 அன்று, ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, குழு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையையே தாம் தபால் மூலம் பெற்றதாக கம்பன்பில கூறிவருகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, முன்னதாக, இந்த தாக்குதல் தொடர்பாக பல முறையான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனக் சில்வா ஆணைக்குழு என்பன சாட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய விசாரணைகளை மேற்கொண்டன.
எந்தவொரு விசாரணைக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளைப் பின்பற்றி அந்த இரண்டு அறிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. மாறாக அல்விஸ் தரப்பு அறிக்கையை ஆராயும் போது அங்கு மேற்கொள்ளப்பட்டது தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை ஆராய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழைக்கப்பட்டதா, வழக்கறிஞர்கள் பங்கேற்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் மூன்று நபர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தனி ஆவணமாகும்.
முந்தைய இரண்டு அறிக்கைகளும் தெளிவான உண்மைகளை முன்வைத்தன. அந்த அறிக்கைகளில் ஷானி அபேசேகர அல்லது ரவி செனவிரத்ன மீது குற்றம் சாட்டப்படவில்லை.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
குற்றச் செயல்களைத் தடுப்பது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பல்ல. விசாரணைகளை நடத்தி முடிவுகளை எடுப்பதுதான்.
தடுப்பு என்பது புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புதுறைவரம்புக்கு உட்பட்டது. இந்த அறிக்கை இந்த இரண்டு அதிகாரிகளையும் இழிவுபடுத்தும் முயற்சியாகத் தோன்றுகிறது.
இது நடக்கக்கூடாத ஒன்று. கடந்த அரசாங்கத்தின் பங்குதாரர்களால் கம்மன்பிலவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையானது தபால் மூலம் பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரம் இல்லை” என்றார்.
இவ்வாறு குறித்த அறிக்கைகளின் பின்புலம் மற்றும் விசாரணை முறைமை தொடர்பிலான ஆராய்வுகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத போக்கை வெளிப்படுத்தி வருகிறது.
அவ்வாறெனின் கம்பன்பில கையில் உள்ள அறிக்கை எவ்வாறு பெறப்பட்டது?
அதை தபால் மூலம் பெற்றேன் என கம்பன்பில கூறினாலும், அதற்கான ஆதாரங்களை அரசாங்கம் இன்றளவும் கோருகிறது.
பல்வேறு நலன்களைக் கொண்ட நபர்களின் நலனுக்காக குற்றச்சாட்டுக்கள் இடம் பெறுவதாக முன்வைக்கப்படும் அரசியல் நகர்வுகள் இன்றுவரை தாக்கத்தை செலுத்துவது என்னவோ மக்களையே...
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை சரியான முறையில் தொடர்வோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வோம். இதையே இந்த அரசும் கொடுத்துள்ள வாக்குறுதி.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |