பதவி விலகிய தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சவீன் செமகே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி,உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
2025 மே 9 ஆம் திகதியன்று, அடையாளம் தெரியாத இரண்டு பேர் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை, அவரது வீட்டை சுற்றி நோட்டமிடுவது, வீட்டின் சீசீரிவி திரையில் பதிவாகியுள்ளது.
அச்சுறுத்தல்
அவர்கள் செமகே உறங்கிக்கொண்டிருந்த படுக்கையறைக்குள் எட்டிப்பார்த்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார நிபுணரான செமகே, 2024 ஜனவரியில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
முன்னர் நவம்பர் 2021 முதல் மே 2022 வரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார், எனினும் அப்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லாவுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவி விலகினார்.
மருந்து கொள்முதலில் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதால், அவருக்குப் பதிலாக வந்த முன்னாள் அமைச்சர் ரமேஸ் பத்திரானவால், கடந்த ஆண்டு மருந்து ஒழுங்குமுறை பொறிமுறையை ஒழுங்குப்படுத்துவதற்காக, செமகே நடப்புப் பதவியில் அமர்த்தப்பட்டார்.
காரணம்
இருப்பினும், மருந்துத் திணைக்களத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார், விலை நிர்ணயம் செய்வதிலும், பொது நிதியைச் சேமிக்க ஏகபோகங்கள் உட்பட்ட விடயங்களில் தாம், மேற்கொண்ட நடவடிக்கைகள், திணைக்களத்துக்குள் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது.
எனவே தம்மை பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுவே தமக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சவீன் செமகே தெரிவித்துள்ளார்.
