மன்னாரில் பல வியாபார ஸ்தலங்களுக்கு சீல்
மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட 3 வியாபார ஸ்தலங்களுக்கு இவ்வாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கையின் போது, பல்வேறு சுகாதார குறைபாடுகள் உள்ளடங்களாக மருத்துவ சான்றிதழ், உரிய அனுமதியின்றி இயங்கி வந்த வெதுப்பகம், உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் உணவகங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நகரசபைக்கு கிடைக்க பெற்று வரும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் மூர் வீதியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை களஞ்சியப்படுத்தி, உரிய அனுமதி பெறாது இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கும், மன்னார் - உப்புக்குளம் பகுதியில் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றுக்கும், மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியில் இயங்கி வந்த ஒரு வர்த்தக நிலையத்திற்கும் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.



