இந்துமாகடல் அரசியலும், ஈழத் தமிழர் அரசியலும்
இலங்கை இனப்பிரச்சினை என்பது இலங்கை தீவில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கும், சிங்கள மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான இன முரண்பாட்டை மட்டும் மையப்படுத்திய ஒரு பிரச்சினை அல்ல.
இந்தப் பிரச்சினை இந்து சமுத்திர அரசியல் சார்ந்த பிரச்சினையாகவும், அதே நேரம் இந்திய உபகண்டம் சார்ந்த பிரச்சினையாகவும், உலகம் தழுவிய அரசியல் ஆதிக்கத்தின் செல்வாக்கு உட்பட்ட பிரச்சினையாகவும் அமைந்திருக்கின்றது.
அதனாலேதான் இலங்கை இனப்பிரச்சினையை தேசிய இனப் பிரச்சினை என அழைக்க வேண்டியுள்ளது.
இத்தகைய இலங்கைத் தீவின் தேசிய இனப் பிரச்சினையை இலங்கை தீவுக்குள்ளோ அல்லது இந்திய உபகண்டத்துக்குள்ளோ வைத்து தீர்த்து விட முடியாது.
இலங்கையில் பெரும் பொருளாதார முதலீடுகள்
அது உலகம் தழுவிய அரசியலோடும் ஆளுகைப் போட்டியோடும் இந்து சமுத்திர அரசியலோடும் அதன் அழுகையோடும் பொருத்தி சமப்படுத்தியே தீர்க்கப்பட முடியும்.
எனவே இலங்கையின் இனப் பிரச்சினையை இலங்கை தீவுக்குள் அதிகாரப் பகிர்வின் மூலம் இலகுவாக தீர்த்துவிடப்பட முடியாது. காரணம் இலங்கைத்தீவு உலகம் தளவிய அரசியலின் ஒரு கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளது.

இலங்கையின் கேந்திரத் தன்மை உலக அரசியலை நிர்ணயிக்கும் சக்திகளுக்கு அவசியமாக உள்ளது. இன்றைய உலகின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகள் அவை பொருளாதாரத்தின் அடித்தளத்தில் மையம் கொண்டுள்ளன.
பொருளாதார கட்டமைப்பு பலத்தின் ஊடாகவே இன்றைய உலக அரசியலை தீர்மானிக்கும் சக்திகள் தம்மை முதன்மைப்படுத்துகின்றன.
இந்த அடிப்படையில் கோவிட் தொற்று இடறுக்குப் பின்னர் உலக அரசியலின் போக்கு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்த மாற்றம் இலங்கை அரசியலிலும். அதன் போக்கிலும் செல்வாக்கைச் செலுத்த தொடங்கிவிட்டது.
இதன் விளைவுகள்தான் சீனா இலங்கை நோக்கி வந்து இலங்கையில் பெரும் பொருளாதார முதலீடுகளை செய்ய முனைகிறது. அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக இந்தியாவும் இலங்கைக்குள் பொருளியல் முதலீடுகளைச் செய்ய முண்டியடிக்கிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவும் ஐப்பானும் இலங்கையை நோக்கி தமது பார்வையை திருப்பியிருக்கின்றன.
இலங்கை தீவு இந்தியா உபகண்டத்துக்கு மிக நெருக்கமாக 32 கிலோமீட்டர் இருப்பதனால் அது இந்தியாவின் பாதுகாப்பு வலயத்துக்குள்ளும், வளையத்துக்குள்ளும் இருப்பதனால் இந்தியா இலங்கை நோக்கி எப்போதும் தனது பார்வையை செலுத்தும். இலங்கையின் அரசியல் மாற்றத்தில் அது செல்வாக்கு செலுத்த முனையும்.
இலங்கையின் சர்வதேச உறவையும் அது கவனமாக கண்காணிக்கும், கட்டுப்படுத்த முனையும். அது இயல்பான இந்திய அரசின் வெளியுறவு நடவடிக்கையாகவும் அமையும்.
இந்த நடவடிக்கைகளுக்குள் ஈழத் தமிழர் பிரச்சினையும் உள்ளடங்கும்.
ஈழத் தமிழர் பிரச்சனையின் அல்லது ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் சார்ந்த விடயத்தில் அது தனது உள்நாட்டு அரசியலையும் கவனத்தில் கொள்ளும்.
இந்தியா உலகளாவிய அரசியல் நலன்
இந்தியா ஒரு பல்தேசிய இனங்களின் அரசு என்ற அடிப்படையில் நூற்றுக்கு அதிகமான தேசிய இனங்கள் உள்ள தனது உள்நாட்டு பிரச்சினையையும் இலங்கை இன பிரச்சினையோடு ஒப்பு நோக்கி பார்க்க முனையும்.
அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அது எடை போடும்.

இந்தியாவைப் பொறுத்தளவில் அது தனது பாதுகாப்பு வளையத்துக்குள் தன்னை பாதுகாப்பதற்கான புவிசார் அரசியலை(Geopolitics) மட்டுமே மையப்படுத்தியதாகவும் அதுவே தனது தேசிய நலனாகவும் கொண்டுள்ளது.
இன்றைய நிலையில் இந்தியா உலகளாவிய அரசியல் நலன்களில் (Global Political Interests) பெரும் பாய்ச்சலை செய்ய வல்ல நிலையில் இல்லை. ஐநா சபையில் வீட்டு அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் சீனா தவிர்ந்த ஏனைய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளின் சனத்தொகையிலும் விட இந்தியாவின் சனத்தொகை மிகப் பெரியது.
ஆயினும் இந்தியாவிற்கு ரத்து அதிகாரம் இல்லை. ஆனால் ரத்து அதிகாரம் உள்ள இந்த நான்கு நாடுகளையும் சார்ந்து இந்தியா தனது சர்வதேச நலனையும், அரசியலையும் முன்னெடுக்கிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய மேற்குலகத்தைச் சார்ந்து தனது உலகம் தழுவிய அரசியல் செல்வாக்கை அது பிரயோகித்து வருகின்றது.
அதே நேரத்தில் ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்த நாடாகவும், எப்போதும் ரஷ்யாவின் அணியில் உள்ள நாடாகவுமே உள்ளது.
இந்த இரட்டை நிலையில் அது இரண்டு துருவங்களையும் ஒரு சம நேர்கோட்டில் வைத்து முகாமைத்துவம் செய்கிறது. இவற்றிற்கு இந்தியாவின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் (Geo-strategic importance ) அதன் பெரிய சனத்தொகையும் இந்துசமுத்திரத்தின் பிராந்திய வல்லரசாக வளர்ந்து வரும் நாடாகவும் இருப்பதுவே காரணமாகும்.
ஆயினும் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்து சமுத்திர நாடல்லாத சீனா இலங்கைக்குள் அடிக்கட்டுமான அபிவிருத்தி மற்றும் வர்த்தகம் என்ற முறையில் புதிய பட்டுப்பாதை கோட்பாடு(New Skill Route Theory) அதாவது இந்த பட்டுப்பாதை திட்டத்தில் தரைசார் வீதி கடல்சார் வீதி (The Belt And Road Initiative) அபிருத்தி என சீனா ஆரம்பித்திருக்கும் "One belt one road" திட்டத்தில் கேந்திர ரீதியில் சுற்றிவளைப்பது (Encirclement) அதாவது நாடுகளை கிடுக்குப்பிடிக்குள் சிக்குண்ணச் செய்வது(Entanglement) எதிரிக்கான அனைத்து மார்க்கங்களையும் அடைத்து மூடுதல்(Envelopment) என இந்த Encirclement, Envelopment and Entanglement மூன்று “EN’ களைக் கொண்ட வியூகமான புதிய பட்டுப்பாதை திட்டத்தை அபிவிருத்தி மற்றும் வர்த்தகம் என்ற முறையில் இந்துசமுத்திர நாடுகளில் காலூன்றி அது தனது உலகம் தழுவிய அரசியலை விஸ்தரிப்பதற்கான ஒநடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்
உலகளாவிய வர்த்தகத்துக்கு இந்து மாகடல் மிக அவசியமானது. அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் தொடுகடலாகவும் தாய்க்கடலாகவும் இந்து சமுத்திரம் அமைந்திருக்கிறது.
இது 70வீத 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சமுத்திரம்.

இந்தச் சமுத்திரத்தின் கரைகளில் 36 நாடுகள் உள்ளன. இந்து சமுத்திரக்கரைகளில் உள்ள துறைமுகங்களை அண்டிப் பிழைக்கும் நாடுகளாக 11 நாடுகள் உள்ளன.
ஆகவே இந்த 47 நாடுகள் தவிர்ந்து இந்து சமுத்திரத்தில் ராணுவ தளத்தை கொண்டுள்ள நாடாக 2020 வரை அமெரிக்காவும் பிரித்தானியாவுமே இருந்து வந்தன. ஆனால் கொரோனாவுக்கு பின்னர் சீனா செங்கடலில் ஜிபிட்டியில் ஒரு ராணுவத் தளத்தை அமைத்துக் கொண்டு விட்டது.
அதே சமநேரத்தில் மியான்மாவில் கோர்க்கோ தீவு, இலங்கையில் அம்பாந்தோட்டை, பாகிஸ்தானில் குவாதார, கெனியாவில் லாமோ தீவு ஆகிய துறைமுகங்களை நீண்ட கால குத்தகைக்கு பெற்றுக் கொண்டு விட்டது. இந்தப் பின்னணியில் இன்று இந்து சமுத்திரத்திற்கான ஆளுகைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது.
பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூட்டாக டியாகோ காசியாவில் 1960ம் ஆண்டின் பின்னர் ராணுவ, கடற்படை, விமானப்படை கூட்டுத்தளத்தை அமைத்து இந்து சமுத்திரத்தை கண்காணித்து வந்தனர்.
ஆயினும் இப்போது ஆசிய ஆபிரிக்க கண்ட பகுதிகளை அண்டிய துறைமுகங்களை சீனா பெற்றதனால் இந்து சமுத்திரத்தின் தென்கோடியில் அமைந்திருக்கின்ற டியாகோ காசியாவின் முக்கியத்துவம் சீனாவால் உடைக்கப்பட்டு விட்டது. இந்து சமுத்திரத்தை கண்காணிப்பதற்கு ஏற்ற ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் அமெரிக்காவுக்கு தேவைப்படுகின்றது.
இந்த தேவையை நிவர்த்தி செய்யக் கூடியதாக இலங்கைக்கு இருப்பதனால் தற்போது அமெரிக்கா இலங்கை நோக்கி தனது பார்வையை திருப்பி உள்ளது என சர்வதேச அரசியல் ராணுவ ஆய்வுகளைச் செய்ய வல்லவர்களால் கணிக்கமுடியும்.
அமெரிக்காவின் வருகைக்கான முன் ஒத்திகை
அதனை மெய்ப்பிப்பது போலவே அமெரிக்காவின் போர்க்கப்பல் சான்டா பாப்ரா எனப்படும் USS Santa Barbara (LCS 32) 16 ஓகஸ்ட் 2025 அன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முதன் முறையாக நங்கூரமிட்டு சில நாள் தரித்துச் சென்றது.
இதனை அமெரிக்கா–இலங்கை உறவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என இலங்கை அரசு குறிப்பிட்டு இருந்தது.

அதே நேரத்தில் இலங்கையின் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அறுகம்பை என்னுமிடத்தில் அதிக இஸ்ரேயிலியர்கள் வந்தது தங்கச் செல்வதாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் விஷனமடையும் செய்திகள் வெளி வருகின்றன.
இஸ்ரேலியர்களின் வருகை அமெரிக்காவின் வருகைக்கான முன் ஒத்திகை என கருதமுடியும். அதனை ஒட்டியே அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே அல்லது திருகோணாமலையை பெறுவதற்கான முயற்சிகள் எடுப்பதாகவும் ஊகிக்கலாம்.
இவ்வாறு பிராந்திய வல்லரசுகளும் சர்வதேச வல்லரசுகளும் தமக்கான தளங்களைப் பெறுவதற்கான போட்டியில் முட்டி மோதும் களமாக இலங்கை தீவு எதிர்காலத்தில் மாறப் போன்றது என்பது உண்மைதான்.
இந்த முட்டி மோதும் களத்துக்குள் ஈழத் தமிழர் சுயநிர்ணயத்திற்க்கான போராட்டமும் அகப்பட்டு பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இந்தச் சூழமைவில் உலகளாவிய அரசியலையும், சர்வதேச உறவையும் ஈழத் தமிழர் தமது இருப்பியல் சார்ந்து பலப்படுத்த வேண்டிய தேவை தோன்றி வருகிறது.
இந்த நிலையில் இந்துமாகடல் அரசியலில் ஈழத் தமிழர் எத்தகைய பங்கையும் பாத்திரத்தையும் வகிக்க முடியும்? ஈழத் தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் அமைவிடம் காரணமாக நாம் தவிர்க்க முடியாத இந்து மகாகடல் அரசியலில் பிணைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விருப்பு வெறுப்புகளை கடந்து பிராந்திய, சர்வதேச உறவை வளர்க்கவல்ல ஒரு தெளிவான வெளியுறக் கொள்கையை முதலில் நாம் மறுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
அத்தகைய ஒரு வெளியுறவுக்கொள்கையே ஈழத் தமிழர்களை இந்துமகாகடல் அரசியல் சூறாவளியில் இருந்து பாதுகாக்கவல்ல பாதுகாப்பு கவசமாக அமையும்.
தமிழர் தாயக நிலப்பரப்புக்குள்ள அடங்கும் பிரதேசங்கள்
இந்த சமுத்திரத்தில் அமைவிடம் சார்ந்து ஈழத் தமிழர் தாயகம் இத்தகைய பங்கையும், பாத்திரத்தையும் வகிக்க போகிறது என்று பார்க்கின்ற போது இந்து மகாகடலில் எமக்கு இருக்கின்ற ஆளுகைக்கான வாய்ப்புகள் பற்றி பார்ப்பது அவசியமானது.

இலங்கைத்தீவின் மொத்த கடற்கரையோர நீளம் 1516.4 கிலோமீட்டர்களாகும். இங்கு14 கரையோர மாவட்டங்கள் உள்ளன அவற்றில் 7 மாவட்டங்கள் தமிழர் தாயத்திற்குள் அடங்கும்.
கொழும்பு-31.2 கிலோமீட்டர் கம்பஹா-34.3 கிலோமீட்டர் களுத்துறை-34.3 கிலோமீட்டர் காலி-79.3 கிலோமீட்டர் புத்தளம்-241.3 கிலோமீட்டர் மாத்தறை-51.2 கிலோமீட்டர் அம்பாந்தோட்டை-145.5 கிலோமீட்டர் ஆகவே ஶ்ரீலங்காவின் மொத்தம் கடலோரம் 617.1 கி.மீ மட்டுமே.
இதில் புத்தளம் மாவட்டத்தின்-241.3 கி.மீ கடற்கரையோரப்பகுதியின் பெரும்பகுதியில் தமிழ்பேசும் மக்களே வாழ்கின்றனர்.
அதே நேரம் தமிழர் தாயக நிலப்பரப்புக்குள்ள அடங்கும் மன்னார்-173.4 கிலோமீட்டர் யாழ்ப்பாணம்/ கிளி -336.6 கிலோமீட்டர் முல்லைத்தீவு-66.8 கிலோமீட்டர் திருகோணமலை-83.9 கிலோமீட்டர் மட்டகளப்பு- 120.6 கிலோமீட்டர் அம்பாறை-118 கிலோமீட்டர் என அளவீடுகள் இருப்பதனால் தமிழர் தாயகத்தின் மொத்தம் கடலோரம் 899.3 கி.மீ ஆக உள்ளது.
தரவுகளின் அடிப்படையில் இலங்கை தீவில் தமிழர் தாயகமே அதிக கரையோரப் பகுதியைக் கொண்டதாகவும் இந்து சமுத்திரக்கரையை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது என்பதனால் தமிழர் தாயகம் இந்து மகா கடல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இன்று முக்கியத்துவம் பெறுகிறது.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தில் கடற்கரையோரங்கள் பிராந்திய வல்லரசினதும் சர்வதேச வல்லரசுகளினதும் கவனத்தை பெறுவதோடு தமிழர் தாயகத்தின் துறைமுகங்களை தமதாக்குவதற்கு அவை போட்டி போடுகின்றன.
இந்நிலையில் ஈழத் தமிழர்கள் தம்மை தேசிய கட்டுமானத்துக்கு உட்படுத்தி பலம் வாய்ந்த உள்ளக அரசியலை மேற்கொள்வதன் ஊடாக சர்வதேச பேரம் பேசல்களில் ஈடுபட முடியும்.
இப்போது தமிழர் தாயகத்தின் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அறுகம்குடா இப்போது அருகம்பே என சிங்கள பெயர் சூட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மக்கள் கூட்டம் பூர்விகமாய் வாழ்ந்த இடத்திலிருந்து இடம்பெயர வைத்தோ அல்லது அவர்களின் சனத்தொகை ஐதாக்கியோ, குறைத்தோ அல்லது இல்லாத ஒழிப்பதோ இனப்படுகொலை என்ற வகைக்குள்ளேயே அடங்குகிறது.
அவ்வாறே ஒரு வாழ்விடத்தின் பெயரை இன, மொழி, மதவாதம் சார்ந்தோ மாற்றுவது என்பவை எல்லாம் இனவழிப்பு என்ற பகுதிக்குள்ளேயே அடக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில்தான் தமிழர்களின் பூர்வீக வாழ்விடமான அறுகம்குடா இன்று சிங்களத்தில் இனவாத நோக்கில் அருகம்பே என்ன ஆக்கப்பட்டதும் ஒரு தமிழினப்படுகொலைதான்.
பெருமளவு இனச் சுத்திகரிப்புக்கு உட்பட்டிருக்கும் அம்பாறை மாவட்டம் அதனுடைய கடற்கரை ஓரம் தொடர்ந்து தமிழர்களை வாழ்கிறார்கள்.
மட்டக்களப்பின் எல்லையிலிருந்து திருக்கோவில் வரைக்கும் முழுமையாக கடற்கரையோரம் தமிழர்களின் கையிலேயே உள்ளது
அதற்கு அப்பால் இப்போது அறுகம்குடா சிங்களமயமாக மாறத் தொடங்கி விட்டது. அதேநேரத்தில் அதற்கு அப்பால் அம்பாறை மாவட்டத்தின் எல்லையான பாணமை சிங்களவர்களும் தமிழர்களும் வாழும் ஒரு கிராமமாக மாறி உள்ளது.
தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்
தமிழர்களின் அம்பாறை மாவட்டத்தின் தென் எல்லை உகந்தை முருகன் கோவிலுடன் முடிவடைகிறது. உகந்தை முருகன் ஆலய வளாகம்கூட இப்போது சிங்களமயமாகவே காட்சியளிக்கிறது.
திருக்கோவிலில் இருந்து குமுக்கன் ஓயா வரையான கடற்கரையோரம் ஆழம் கூடிய கடற்பரப்பவும் அதே நேரத்தில் கடரே கடல் அரிப்புக்கு உட்படும் பகுதியாகவும் உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே நிந்தவூர் பகுதியில் ஒலுவில் துறைமுகம் அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டது.
ஒலுவில் பகுதி புவியியல் ரீதியில் படிதல் நில உருவத்தைக் கொண்ட பகுதி இந்து சமமுத்திரத்தின் பேரலைகளினால் அறுகம்குடப் பகுதியில் அரிக்கப்படுகின்ற மணல் ஒலுவில் பகுதியில் படிய விடப்படுகிறது.
இந்த புவியியல் நிலைமைகளை கருத்தில் கொள்ள வெறும் அரசியல் நோக்கத்திற்காக ஒலுவில்லில் ஒரு செயற்கைத் துறைமுகத்தை பல கோடி செலவில் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தத் துறைமுகம் இந்து சமுத்திரப் பேராலைகளினால் கொண்டுவரப்பட்ட மணல்மேடுகள் நிரப்பப்பட்டு துறைமுகம் இன்று துரவாக மாற்றமடைந்து கிடப்பதை காண முடிகிறது.
பெருமளவு தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் தென் கடற்கரையோரமான அறுகம்குடா நீண்ட வெண்மணல் கடற்கரையும் ஆழங்கூடிய கடற் பரப்பையும் கொண்ட உல்லாச பிரயாணத்துறைக்கு உகந்த இடம் மட்டுமல்ல பெரும் கப்பல்களை இலகுவாக கொண்டு வந்து நிறுத்தக்கூடிய சேர்க்கை துறைமுகத்தை அமைக்கக்கூடிய புவியியல் சாதகத் தன்மையும் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இருந்து குறுக்காக அன்பார்ந்த ஓட்டை துறைமுகம் அம்பாந்தோட்டை துறைமுகம் 40 மையில் தொலைவிற்கு உள்ளேயே உள்ளது என்பதை என் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய ஓர் இடத்தை அமெரிக்காவோ மேற்குலகமோ விரும்புவதும் இயல்பானதே.
போராட்டத்திற்கான ஆயுத வளங்கள்
இந்துசமுத்திர அரசியல் போட்டோ போட்டியின் தேவை நிமித்தம் அறுகம்குடாவில் எதிர்காலத்தில் ஒரு அமெரிக்க துறைமுகமோ அல்லது மேற்குலக நாடு ஒன்றின் துறைமுகமோ வருவதற்கான சாத்தியங்கள் இப்போது தென்படத் தொடங்கி விட்டது.

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையோரம் ஏன் இன்று இவ்வளவு முக்கியத்துவத்தை பெறத் தொடங்குகின்றது? அதற்கான இந்து சமுத்திர அரசியல் என்ன? அதற்கான இந்து சமுத்திர ராணுவ கேந்திரத் தன்மை என்ன? என்பதை பற்றி நாம் ஆய்வது அவசியமானது.
இவ்வளவு காலமும் இந்து சமுத்திரத்தை கண்காணிப்பதற்கு டியாகோகாசியா தீவு அமெரிக்காவுக்கு பயன்பட்டது.
இப்போது சீனா இந்த சமுத்திரத்துக்குள் நுழைந்து இந்த சமுத்திரத்தின் கண்டப் பரப்பை அண்டிய ஐந்து துறைமுகங்களை பெற்றுக் கொண்டதன் விளைவு அமெரிக்கா கண்டப்பரப்பு கடற்கரையை நோக்கி நகர வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சமுத்திர அரசியலில் டியாகோ காசியா எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதோ அவ்வாறே ஈழப் போராட்டத்திலும் போராட்டத்திற்கான ஆயுத வளங்களிலும் டியாகோகாசியா தீவின் அமெரிக்க தளம் இருந்தமை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான காரணமாகவும் அமைந்திருந்தது என்பது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 29 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.