மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு
திருகோணமலை- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நேற்று (14.10.2026) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இத்தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 688 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரச காணிகளில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களில், அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த 33 பேர், ஏற்கனவே நடைபெற்ற காணிக் கச்சேரியின் போது காணிகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
காணி வழங்கும் நடவடிக்கை
ஏனையோரின் விண்ணப்பங்களும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக மீளாய்வு செய்யப்படும் என்றும், உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்குத் தேவைக்கேற்ப காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணி வழங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் காணிக் கச்சேரிகள் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அவ்வாறு செயற்படத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri