வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: துபாய் சுத்தாவுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பில் ‘துபாய் சுத்தா’ என அறியப்படும் ரன்தத்திகே நிசங்க பிரியதர்சன என்பவருக்கு, 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில், அவருக்கு 100,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளருக்கு 700,000 ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா மூலம் துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த நபர் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 700,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் கிரியுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தப்பியோட முயற்சி
இந்தநிலையில், வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய சந்தேகநபர், கடுவலை பகுதியில் தனது தனிப்பட்ட வாகனத்தில் அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் புலத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராவார். அத்துடன் அவர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக இவர் மீது வெலிசர மற்றும் கடுவலை நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேவேளை, பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் கோரும் நபர்களிடம் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறான மோசடிகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குத் தெரிவிக்க அவசர உதவி எண்: 1989, தொலைபேசி எண்: 011 288 2229 எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.