ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேரும் வெலிசறை முகாமில்!- திருகோணமலைக்கு அனுப்பப்பட்ட கப்பல்
ஈரான் கடற்படை கப்பல்களில் ஒன்றான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடந்த கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கியது.
ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல்
இந்நிலையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது.

எவ்வாறிருப்பினும் இலங்கையின் கடல் சார் வர்த்தக பாதிப்புக்களைக் கருத்தில்கொண்டு அக்கப்பலுள்ளவர்கள் மீட்டு, பின்னர் அதனை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசு அனுமதியளித்தது.
அதற்கமைய அந்தக் கப்பலிலிருந்த 208 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கொழும்புத் துறைமுகத்துக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 53 அதிகாரிகளும், 84 கெடட் அதிகாரிகளும், 48 சிரேஷ்ட கடற்படையினரும், 23 கடற்படையினரும் உள்ளடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் வெலிசறையிலுள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகள்
இதேவேளை,தாக்குதலுக்குள்ளான ஐரிஸ் டெனா கப்பலிருந்த 90 பேரது சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் நேற்று வியாழக்கிழமை காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தச் சடலங்களை ஈரானுக்கு அனுப்பி வைக்கும் வரை அவற்றை வைத்திருப்பதற்கான அதிகுளிரூட்டப்பட்ட இரு கொள்கலன்கள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இந்தத் தாக்குதலுக்கு உள்ளான கடற்பிராந்தியத்தில் தொடந்தும் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.








சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam