காவி உடை அணிய மாட்டேன்..! சிறைக்குள் இருக்கும் ஞானசார தேரரின் திடீர் தீர்மானம்
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், காவி உடை அணிய மறுத்துள்ளார் என குறிப்பிட்டதாக அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
பௌத்த விநய விதிகளுக்கு அமைய மீண்டும் முறைப்படி காவியுடை அணிவதற்கு சிறைச்சாலை நிர்வாகம் இதுவரை நேரம் ஒதுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் குழுவொன்று சிறைச்சாலைகள் தலைமையகத்திற்கு சென்றிருந்தது.
காவியுடை அணியும் முறை
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அக்மீமன தயாரத்ன தேரர், ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்ட போது அவரது காவியுடை அகற்றப்பட்டமையானது சிறைச்சாலை விதிமுறைகளுக்கே முரணான செயலாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், ஒரு பௌத்த பிக்குவின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்ட பின்னர், அதனை சாதாரண ஆடைகளைப் போன்று தான்தோன்றித்தனமாக மீண்டும் அணிந்து கொள்ள முடியாது எனவும், அதற்கென குறிப்பிட்ட சாசன மற்றும் விநய சம்பிரதாயங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விநய விதிகளுக்கு முரணான வகையில் காவியுடை அகற்றப்பட்டமையால், சிறைக்கூடத்திற்குள் வைத்து சாதாரணமாக மீண்டும் காவியுடை அணிவதற்கு ஞானசார தேரரே மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும், பௌத்த சாசனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த விரும்பாமையே இதற்குக் காரணம் எனவும் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டார்.