வரலாற்றில் எந்தவொரு தலைவரும் செய்ய முடியாத சாதனையை செய்த மகிந்த! வரைபடத்திலும் மாற்றம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்ய முடியாத சாதனைகளை செய்தவர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வருகைத் தந்துள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றிய மகிந்த
அவர் எந்தளவுக்கு திறமையாகப் பொய்களைக் கூறி இந்த நாட்டு மக்களை ஏமாற்றினார் என்றால், கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது எனக் கூறப்பட்ட மேற்கு கொழும்பு தொகுதியில்கூட அநுர குமார திஸாநாயக்கவால் முடிந்தது.
இந்த நாட்டில் இதற்கு முன்னரும் பொய்களைக் கூறி அரச தலைவர்களாகப் பதவியேற்றவர்கள் இருந்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் உருவான அனைத்து அரச தலைவர்களும் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏதோவொரு வகையில் பொய்களைக் கூறியுள்ளனர்.

ஆனால், தாம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 100 சதவீதத்தினையும் நிறைவேற்றிய ஒரே தலைவர் இலங்கை வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மாத்திரமே ஆவார்.
இந்த நாட்டின் எந்தவொரு தலைவராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை மகிந்த ராஜபக்ச செய்தார். அவர், இலங்கையின் வரைபடத்தில் புதிதாக ஒரு பகுதியைச் சேர்த்தார்.
ஏனைய அனைத்து தலைவர்களும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகக் குறைந்தளவிலோ அல்லது அதிகளவிலோ பொய்களைக் கூறியுள்ளனர்.
இருப்பினும் ஆடசிக்கு வந்த பின்னர் நாட்டின் தலைவராகவும், அரச தலைவராகவும் இருந்துகொண்டு மக்களிடம் பொய்களைக் கூறியவர்கள் எவரும் இல்லை.
ஆனால், அநுர குமார திஸாநாயக்க அரச தலைவராகப் பதவியேற்ற பின்னரும் மக்களிடம் பொய்களைக் கூறுவதையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களைக் கூறியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களிடம் உண்மைகளைக் கூறினார்கள். ஆனால், முதன் முறையாகப் பொய்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தி, பொய்களின் மூலம் நாட்டை அழிக்கும் ஜனாதிபதி ஒருவரை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம்.
2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியபோது இலங்கையின் வறுமை நிலை 10 சதவீதமாக இருந்தது.
ஆனால், அநுர குமார திஸாநாயக்க இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் வறுமை நிலையை 16 சதவீதமாக அதிகரிப்பதில் வெற்றி கண்டுள்ளார்.
அதேபோன்று, நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையும் அதிகரித்துள்ளது. இன்று இந்த நாட்டில் சட்டவிரோதச் செயற்பாடுகளும் சட்டமின்மையும் தலைதூக்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.