கல்குடா கடற்கரையில் கழிவுகளை கடலுக்குள் விடுவதை நிறுத்துமாறு கோரிக்கை
மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று கல்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நூல் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கடலுக்குள் விடுவதை நிறுத்த வேண்டும் எனரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.
அத்தோடு, கழிவுகள் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்குடா சாயத் தொழிற்சாலை கழிவுநீரினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் குறித்த தொழிட்சாலைக்கான வியாபாரச் சான்றிதழ் வழங்கும் போது விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றை ஏறாவூர் பற்று தவிசாளரிடம் வழங்கிபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு கல்குடா கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ள நூல் மற்றும் துணிக்கு சாயம் போடும் தொழிற்சாலையாலை கழிவுகளை கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழல், மீனவர் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதோடு அனுமதி வழங்குவது குறித்து நிபந்தனை விதிக்க கோரிக்கை விடுக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, பாசிக்குடா ஏறாவூர் பற்று கடற்கரை பகுதிகள் என்பன இலங்கையின் முக்கியமான கடல் வள, மீன்வளம் மற்றும் சுற்றுலா வளப் பகுதிகளில் ஒன்றாகும்.

கல்குடா கடற்கரை பகுதி என்பது ஒரு சாதாரண நிலப்பரப்பு அல்ல. அது ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம், எதிர்கால சுற்றுலாத்துறை வளர்ச்சியின் மையம், கடல் உயிரியல் வளங்களின் பாதுகாப்புப் பகுதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எதிர்கால சந்ததியினரின் இயற்கை சொத்து.
எனவே, தொழில்துறை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை பேணும் பொறுப்புணர்வுடன் அனுமதி வழங்கிய திணைக்களங்கள் செயல்படும் என நம்புகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.