தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனம் நீக்கம்
இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தெவிநுவரவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் 769வது வருடாந்திர எசல மகா பெரஹெர விரைவில் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பெரஹெரவில் காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பரிந்துரைத்துள்ளார்.
காவடி நடனம் நீக்கம்
ஜூலை 25 ம் திகதியிட்ட கடிதத்தில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய இந்த உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே- ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட காவடி பெரஹெர அம்சத்தை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் பிரதானி, அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.