இந்தியாவின் தேர்வு முறைகள் குறித்து முக்கிய நடவடிக்கை.. மோடி வெளியிட்ட தகவல்
இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், "மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதிய சட்டம்..
இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் கொண்டுவரும் திசையிலும் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறோம்.

எனினும், நாம் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.