உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என அம்பிகை செல்வகுமாரிடம் கோரிக்கை
திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக் கொண்டதை இன்னும் நம்மால் மறக்க இயலவில்லை எனவே தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என சமதா கட்சியின் தேசிய முதன்மை பொதுச் செயலாளர் என்.ஏ.கோன், பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அம்பிகை செல்வகுமாரிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே சமதா கட்சியின் தேசிய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மதிப்பிற்குரிய அம்பிகை செல்வகுமார் அவர்களது நிலைமை எம்மை கவலையடையச் செய்கிறது.
இந்தியாவிலிருந்து எங்களின் ஆதரவு தங்களுக்கும், எமது ஈழ தமிழ் மக்களுக்கும் என்றும் உண்டு.
பல ஆண்டு காலமாக எமது தலைவர் மறைந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களும், நாங்களும் பல வகைகளில் குரலெழுப்பியுள்ளோம்.
தற்போது நான் தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வதெல்லாம், தங்கள் உணவு துறக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதே.
நாம் வேறுவிதமான போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது எங்கள் கருத்து. அன்று மதிப்பிற்குரிய திலீபன் அவர்கள் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக் கொண்டதை இன்னும் நம்மால் மறக்க இயலவில்லை.
இந்தியாவிலிருந்து ஐ. நா சபைக்கு அழுத்தம் கொடுக்க நாமும் வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். நாம் இணைந்து செயல்படலாம்.
எனவே தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டுமாய் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.