காணிகளை மீட்பதற்கு உதவுங்கள்! அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் கோரிக்கை (Video)
இராணுவத்தினரிடம் இருந்து தமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள் என 35 வருடங்களாக அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணம் - பொலிகண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மெசிடோ நிறுவனத்தால் யாழ் பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (8.10.2022) மதியம் இடம்பெற்றது.
முகாம்கள்
இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பலாலிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, கடந்த 35 வருடங்களுக்கு மேலாக யாழ். பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பொலிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சின்னவலை, பாலாவி, நிலவன் ஆகிய முகாம்களில் அதிகளவான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
குறித்த முகாம்களில் வசிக்கும், வருமானத்தை இழந்த 75
குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிராடோவினால் வழங்கி
வைக்கப்பட்டது.
இதன் போது குறித்த மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் காரணமாக பலாலிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நாங்கள் இங்கு தனியார் காணிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
காணிகள் ஆக்கிரமிப்பு
காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை விட்டு விலகுமாறு வற்புறுத்துகின்றார்கள். எங்களது சொந்தக் காணிகளை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து பலன் தரும் மரக்கன்றுகளை உருவாக்கி அனுபவித்து வருகின்றார்கள்.
ஆனால் நாங்கள் அனாதைகளாக ஓலைக் குடிசைகளில் மழை வெள்ளத்திற்குள் சுகாதார சீர்கேடுகள் உடன் வாழ்ந்து வருகிறோம்.
எனவே இலங்கை ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு இராணுவத்தினரிடம் இருந்து எமது
காணிகளை மீட்டு எமது மீள் குடியேற்றத்துக்கு உதவி செய்ய வேண்டும்” என
பொலிகண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.











