இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பதில் அரசியல்வாதிகள் அசமந்தம்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்படுகின்ற காணிகள் தொடர்பிலோ அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலோ எந்த விடயங்களும் பேசப்படாமல் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிலரது தனிப்பட்ட தேவைகள் பற்றி அரசியல்வாதிகள் அக்கறை செலுத்தவிலை்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நேற்றைய தினம் பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன்(M.A.Sumanthiran), தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddharthan), வினோநோதராதலிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா (Shanti Siriskandaraja) முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பங்கு பற்றுதலுடன் பிரதேச சபை மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இவ்வாறு வருகை தந்த அரசியல்வாதிகள் பொது மக்களுக்கு உரிய பொதுவாக உள்ள காணி விடயங்கள் பற்றி பேசாமல் அது தொடர்பாக எந்த ஒரு தீர்மானங்களையும் எடுக்காது, மாந்தை கிழக்கில் அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும், செல்வாக்குடனும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர், ஒருசில பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர் ஆகியோர் கனரக வாகனங்களை கொண்டு நில மாபியாக்களாக பல ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு கண்டு அந்த காணி பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் வருகை தந்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் பற்றி எந்த விடயங்களும் பேசப்படவில்லை.
குறிப்பாக துவரங் குளத்தின் கீழ் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பிலோ அல்லது மூன்று முறிப்பு பிரதேசத்திலுள்ள கொல்லவிளங்குளம், அம்மி மிதித்த குளம், நீல வெட்டிய குளம் போன்ற இடங்களில் பெருமளவான வயல் நிலங்கள் வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கப்படட வேண்டிய விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை.
சிறாட்டிகுளம் பகுதியில் பயிர் செய்கை மேற் கொண்டு வரும் விவசாயக்காணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனவள திணைக்களத்தினால் எல்லை இடப்பட்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறான எந்த விடயங்களும் அங்கு பேசப்படாது, இந்தப் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாது மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற பலர் அரசியல் செல்வாக்குடன் பெருந்தொகையான காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வயல் காணிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் எந்தவிதமான விடயங்களும் பேசப்படாது அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்புக்காக நில மாபியாக்களாக காணிகளை
வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாக அவர்களுடைய பிரச்சினைகளை மாத்திரம் கேட்டறிந்து செல்வதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.