சஜித் அணி எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் விடுத்த வேண்டுகோள்
மாகாண சபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு இலங்கை அரசிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனினும், இந்தத் தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்தியத் தூதுவர் வலியுறுத்து
இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹர்ஷண ராஜகருணா, தயாசிறி ஜயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதே இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சந்திப்பின் போது பரந்தளவிலானதும் பன்முக அடிப்படையிலானதுமான இலங்கை - இந்திய உறவுகள் மற்றும் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.



