காசாவின் அழிவுக்கு இலங்கை தண்டிக்கப்படாததே காரணம்.. சர்வதேச அரங்கத்தின் குற்றச்சாட்டு
16 வருடங்களுக்கு முன்னர் நடந்த உரிமை மீறல்களுக்காக இலங்கை இன்னமும் தண்டிக்கப்படவில்லை. இன்று காசாவில் நிகழ்த்தப்படும் மீறல்கள் - பிரயோகிக்கப்படும் உத்திகளுக்கும் இதுவே முன்னுதாரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், இத்தகைய பின்னணியில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல்திட்டம் இன்றியமையாதது.
இது, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி - உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்தவும் மிக அவசியமானது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பல குற்றங்கள்..
"உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும்.
ஆனால், மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வு அளிக்கப்படாத குற்றங்கள் அதனை ஒத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.
இலங்கை அரசால் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. இதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் இந்தப் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன.
இருப்பினும், அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது.
இலங்கையில் இதுவரை ஆட்சிப்பீடமேறிய அரசுகள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்து விட்டு, அதிலிருந்து விலகிச் செயல்பட்டு வந்திருப்பதன் மூலம், எதனை செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்து வந்திருக்கின்றன.
ஆகையால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையால் நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை தற்போது நடக்கும் கூட்டத்தொடரில் புதுப்பிக்க வேண்டும்.
இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டு போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இரு தரப்பினராலும் மிகமோசமான மீறல்கள் - குற்றங்கள் இழைக்கப்பட்டன.
இலங்கை இராணுவம்..
இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன், குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் எறிகணை தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை 'யுத்த சூனிய வலயங்களாக' அறிவித்தது. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டன.
இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இந்தச் சம்பவங்கள் இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும் அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.
ஜே. வி. பி. எழுச்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன.
அண்மையில், அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியில் 1990 களில் இராணுவக் காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப் புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல்திட்டம் இன்றியமையாதது.
இது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கும் அவசியமானது." என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.



