வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு
மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இயற்கை அனர்த்தங்களின் போது சொத்துக்கள், உயிர் சேதங்கள் தொடர்பில் மாத்திரம் அறிக்கையிடப்படுகின்ற போதிலும், பயிர்ச்செய்கைகளுக்கான சேத விபரங்கள் பட்டியலிடப்படாமையால் விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நட்டஈடு
அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய முறையில் நட்டஈடு கிடைப்பதில்லை எனவும், காப்புறுதிகள் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
சேத விபரங்கள் தொடர்பில் பட்டியலிடாமையே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர், இந்த விடயங்கள் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என கூறியுள்ளார்.
கள அறிக்கையிடல்
மழை மற்றும் வெள்ளத்தின் போது கள அறிக்கையிடல் முக்கியமானது எனவும், அனர்த்தங்களின் போது ஏற்படும் அழிவுகள் தொடர்பான தரவுகளை இற்றைப்படுத்தி, உறுதி செய்ய வேண்டியது இடர் முகாமைத்துவ நிலையத்தின் கடமை எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு தரவுகள் இற்றைப்படுத்தப்படும் போது விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை தவிர்க்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இற்றைப்படுத்தப்படும் தரவுகளின் பிரதியை ஆளுநர் செயலகத்திற்கும் சமர்பிக்க வேண்டும் எனவும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |