முன்னாள் எம்.பியின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: நீதிமன்ற உத்தரவு
அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதிக்க பிரேமரத்னவின் வாகனம் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.எச்.டபிள்யூ.டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு நீதிமன்றத்தில் இன்று(29) அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கைகள் பெப்ரவரி 17ஆம் திகதி அறிவுறுத்தல்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் ஆலோசனை கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனை
வழக்கில் சந்தேக நபரான முன்னாள் அனுராதபுரம் உதவி காவல்துறை அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவரது சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதில் ஏற்பட்ட நீண்ட தாமதத்தால் தனது கட்சிக்காரர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



