இந்தோனேசியாவில் கைதான பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களுக்கு புதிய கடவுச்சீட்டு
இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்கள் மூவருக்கு புதிய கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களான கெஹெல்பெத்தர பத்மே, கமாண்டோ சலிந்து மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோருக்கு இன்றையதினம்(29) புதிய கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த மூவருக்கும் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், போலி கடவுச்சீட்டுகள் ஊடாகவே இந்தோனேசியாவில் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர்.
இந்தோனேசிய அதிகாரிகள் மறுப்பு
இந்நிலையில், குறித்த மூவரும் கைது செய்யப்பட்டாலும் அவர்களின் அடையாளத்தை தெளிவாக உறுதிப்படுத்தும் வரை மூவரையும் இலங்கையிடம் கையளிக்க இந்தோனேசிய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக அவர்கள் மூவருக்கும் இந்தோனேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக இன்று தற்காலிக கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இன்றையதினம் மேற்குறித்த மூவரும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சட்டபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



